× News SignIn
குண்டும் குழியுமாக காணப்படும் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய இணைப்பு சாலைகள்
Published On September 26, 2022 09:09 AM
Posted By Minjur Talks   Views: 210
மீஞ்சூர்
பக்தவச்சலம் தெரு
மீஞ்சூர் பேரூராட்சியில் முக்கிய பகுதியாக உள்ளது பக்தவச்சலம் தெரு. இச்சாலையில் அரசு மருத்துவமனை, மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகம், கிளை நூலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது.


மீஞ்சூர் பிரதான சாலையில் இருந்து இந்த பகுதிக்கு செல்ல இரு முக்கிய சாலைகள் உள்ளன, ஒன்று தேரடி தெரு இணைப்பு சாலை மற்றொன்று லட்சுமிபுரம் பிரதான சாலை. இந்த இரண்டு சாலைகளுக்கும் இடையே சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளி உள்ளது. இதற்கு இடையில் வேறு எந்த சாலைகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேரடி தெரு இணைப்பு சாலை
தேரடி தெரு இணைப்பு சாலை, சுமார் 20 வருடங்களுக்கு முன் சிமெண்ட் காங்கிரேட் கொண்டு போடப்பட்டது. இச்சாலை, மற்ற இணைப்பு சாலைகளைவிட மிக அகலமாக அமைந்துள்ளதால் பிரதான சாலைக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இவ்வழியே கடந்து செல்கிறது.
தேரடி தெரு
கடந்த சில வருடங்களாக இச்சாலை, சிறிது சிறிதாக சேதம் அடைந்து, தற்பொழுது இச்சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிபடுகின்றனர். வாகனங்கள் பள்ளத்தில் தள்ளாடி செல்வதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
லட்சுமிபுரம் சாலை
இதேப்போல் லட்சுமிபுரம் சாலையும் படுமோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர். சாலையின் இருபுறமும் மண்மேடுகள் அதிகம் உள்ளதால் மழைநீரும் எளிதில் வடிவதில்லை என்று கூறப்படுகிறது.
லட்சுமிபுரம் சாலை
மேலும் மீஞ்சூர் பிரதான சாலையில் இருந்து அரசு மருத்துமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ்கள் இந்த இரண்டு சாலைகள் வழியே மட்டுமே செல்ல முடியும். இது தவிர மீஞ்சூர் பிரதான சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டாலோ இல்லை வேறு ஏதாவது பிரச்சனை என்றாலோ இந்த இரு சாலைகள் வழியே மட்டுமே வாகனங்கள் கடந்து செல்லமுடியும்.

எனவே இந்த இரண்டு சாலைகளையும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி சீர்படுத்திதரவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.